Monday, 19 September 2016

ஆதித்தமிழ் வரலாறு -7

முத்தமிழ்ப் பெருமை
தமிழ் மக்கள் வழங்கிவந்த மொழியை தமிழ் மொழியென்றே அழைப்பர். இம்மொழி இனிமையானது என்று எல்லோரும் கூறுவர். ‘இன் தமிழ்’, ‘தீந்தமிழ்’, ‘தேமதுரத்தமிழ்’ என்று பலரும் பலவாறு கூறுவர். பலவறிஞர்களும் தேர்ந்தெடுத்து எழுதிய மொழி இத்தகைய தித்திப்புத்தன்மை கொண்டது. பல மொழிகளையும் கற்றுணர்ந்த வரகவி சுப்பிரமணிய பாரதியார் தமிழ் மொழிபற்றிப்பாடியுள்ள பாட்டைப் பாருங்கள்

“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல்
இனிதாவதெங்கும் காணோம்
பாமரராய். விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
வாழ்ந்திருத்தல் நன்றோ சொல்வீர்?
தேமதுரத் தமிழோசை உலகெல்லாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்”

மேற்போந்த பாரதியாரின் பாட்டில் இரு இடங்களில் தமிழ் மொழியின் இனிமைபற்றிக் கூறப்பட்டுள்ளது. இவற்றினால் தமிழின் இனிமை புலப்படும்.

அறிஞர் கூடி ஆராய்தலே மொழிக்கு அழகாகும். தமிழ் மொழிக்கு சங்கமிருந்தது போன்று வேறு எம்மொழிக்கும் சங்கம் இருந்ததுமில்லை. இதனாலேயே தமிழ் மொழியை ‘சங்கத்தமிழ்’ எனச் சிறப்பாக அழைப்பர். அக்காலத்தில் வெளிப்படுத்தப்பட்ட நு}ல்களைச் சங்க நு}ல்கள் என்பர். தமிழ் மொழி தெய்வத் தன்மை வாய்ந்ததென்பதற்குப் பல சான்றுகள் உண்டு. திருஞான சம்பந்தர் கூற்று இதற்குதாரணமாகும்.

தமிழ் மக்களது செந்தமிழ் உலகிற்கு எத்துணைப் பயன்தரவல்லது என்பதுபற்றி திருவாளர் பா. வே. மாணிக்கநாயக்கரவர்கள் தம் நுண்ணிய ஆராய்ச்சியால் காட்டியுள்ளார். அக்காலத்தில் எம் தமிழ் மொழி முப்பிரிவாக்கப்பட்டிருந்தது. அதனை முத்தமிழ் எனச் சிறப்பாக அழைத்து வந்தனர். இயற்பகுதியே இலக்கிய மென ஏனைய மொழிகளுள் வளங்கவும் இசைக்கொரு பிரிவும், கூத்திற்குப் பிறிதொரு பகுதியுஞ் சேர்த்து மூன்றாக நமது மொழி வழங்கிய பான்மை உள்ளம் ,மொழி, உடல் என்னும் இம் மூன்றையும் நன்கு காட்டும் மூன்று கண்ணாடி போன்று முத்தமிழ் நிலவியதென்பதை உறுதிப்படுத்துகின்றது.
இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்னும் மூன்றும் சேர்ந்து முத்தமிழ் எனப்படும். பொதுவாக மக்கள் பேசுவதும் எழுதுவதும் இயற்றமிழ். அதனை இசையுடன் அதற்கேற்ற ஒலியுடன் பாடும்போது அதனை இசைத்தமிழ் என்பர். இயல் இசை என்னும் இவ்விரண்டுடனும் நடிப்புச்சேருமானால் அந் நடிப்பிற்கேற்ற மொழிகளோடு கூடிய தமிழ் நாடகத் தமிழ் எனப்படும். இயல்பாக மக்கள் பேசிக்கொள்ளும் பேச்சுகளைவிட இசையோடு பாடுவதற்கு ஏற்ற மொழிகளும், குறிப்புடன் நடிப்பதற்கு ஏற்ற தொடர்களும் எல்லா மக்களுக்கும் அளவுகடந்த இன்பத்தைக் கொடுக்கும். இன்பத் தமிழ் மொழியில்தான் இத்தகைய முப்பாகுபாடு உண்டேயன்றி வேறு எம்மொழிக்கும் இச் சிறப்பு இன்று.

இயல்பாக மக்கள் தம்முள் ஒரு பொருளை இன்னொருவருக்கு விளங்க வைக்கும் பொழுது சாதாரணமாக பேசிக்கொள்கிறார்கள். அவர்கள் நடத்தும் சாதாரண இயல்பான தமிழ் நடையை இயற்றமிழ் என்பர். இயல்பாக செய்யுளிலும் அவ்விதம் கூறலாம். பொதுவாக இலக்கண வரம்பிற்குட்படப் பேசுவதையும் எழுதுவதையும் இத்தமிழ்ப் பாகுபாட்டினுள் சேர்த்துக்கொள்ளலாம். இயல்பாக உண்டாகும் இத் தமிழ் சர்வ சாதாரணமானது. இத் தமிழை சிறிது இசையுடன் படிக்கப் புகுங்கால் அது இசைத் தமிழ் என்னும் பெயரைப் பெறுகின்றது. இயற்றமிழை வளர்த்தற்காக சங்கங்களில் இயற்றமிழ்ப் பிரிவு ஒன்று இருந்துள்ளது.

இயற்றமிழை அறம், பொருள், இன்பம், வீடு என்று நான்கு பகுதிகளாகப் பிரித்துள்ளனர். திருக்குறளில் இல்லறம், துறவறம் என்று அறத்தை இரண்டு பகுதிகளாகப் பாகுபாடு செய்யப்பட்டுள்ளது. அரச நீதி, சட்டசபை, நீதிமன்றக் கொள்கைகள், பொருளாதாரம், சாஸ்திரம் என்ற இக்கால தேசப் படிப்புக்களைக் கொண்ட அடிப்படையான கருத்துக்கள் திருக்குறட் ‘பொருட்பாலில்’ அடங்கியுள்ளன. அரசத்தன்மை, அமைச்சன் தன்மை, பகைவரை எதிர்த்தல், அரசர்க்கு வேண்டிய பொருள்கள் என்பன பற்றி ‘அரசியலில்’ தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. ‘இன்பப்பால்’ மனத்திற்கு இதந் தருகின்ற நு}லைப்பற்றிக் கூறுகின்றது. ‘வீட்டு நு}ல்கள்’ மேலுலக இன்பத்தைப்பற்றிக் கூறுகின்றன. இயற்றமிழின் பெருமை அளப்பரியது.

இசை மிகவும் இனிமையானது. இசைத் தமிழிற்கெனத் தனி இலக்கண வரம்புகூட அமைக்கப்பட்டுள்ளது. இசையென்பது பாடல்;. பாலராக இருக்கும் பருவத்தில் ஊசல் வரிகளைக் கேட்டானந்திக்கின்றோம். பாலியர் பருவத்தில் கந்து, கவரி முதலான பாட்டினங்களைக் கேட்டானந்திக்கிறோம். பெரியவர்களாகி மணவினைப்பொழுது மங்கலப் பாக்களைக் கேட்டுச் சந்தோஷமடைகின்றோம். இவ்விதம் ஒவ்வொரு தகுதியையும் நிலையையும் அடையும் பொழுதும் இசையையே கேட்டானந்திக்கிறோம். இசைத் தமிழ் பரந்த சமுத்திரம் போன்ற எங்ஙணும் அகன்ற பரந்துள்ளது.

இயற்றமிழிலும் பார்க்க இசைத்தமிழை மேன்மையாகக் கொண்டாடுவர். பண்டைய நு}லகள் பலவற்றிலும் இசைத்தமிழின் சிறப்பைக் கண்டு நுகரலாம். பண்டைக் காலத்தில் இசைக் கருவிகள் பல்கிக் கிடந்தன. இசைக் கருவிகளையே முத்திறப்படுத்தியிருந்தனர் முன்னோர். சிலப்பதிகாரம் போன்ற நு}ல்களில் இவைகளைக் காணலாகும். அக்காலத்தில் பாணர் என்று ஒரு சாராரும் இசையில் வல்லுனராக இருந்திருக்கின்றனர். அவர்களை இசைவாணர் என்றும் அழைப்பர். பெருங்கதை போன்ற நு}ல்களில் இசையின் சிறப்பைக் காணலாகும். சோழ நாட்டிலே இசைக்கிருந்த சிறந்த பாகுபாட்டை விவரிக்கும்பொழுது,

“குழலினும் யாழினும் குரல்முதல் ஏழும்
வழுவன்றிசைத்து வழித்திறம் காட்டும்
அரும் பெறல் மரபில் பெரும் பாணிருக்கையும்
அமைந்து விளங்கின”

என்று சிலப்பதிகாரத்தில் அதன் ஆசிரியர் கூறியுள்ளார். இன்னும் அந்நு}லின் ஆசிரியர் இசைக்கருவியை மாதவி இயக்கியதை

“மரகதமணித்தாள் செறிந்த மணிக்காந்தள் மெல்விரல்கள்
பயிர்வண்டின் கிளைபோலப் பன்னரம்பின் மிசைப்படா”
என வர்ணிக்கின்றார். பண்டைச் சங்க நு}ல்களில் இசைக்கலை பற்றியும் அக்கால மக்களில் இசை வல்லுனரைப் பற்றியும் பரக்கக் காணலாகும்.

இயல் இசை இரண்டிலும் மேம்பாடாகக் கூறப்படுவது நாடகத் தமிழ் ஆகும். நாடகத் தமிழில் முத்தமிழும் பொதிந்திருக்கும். இயல்பாகவுள்ளதை இசையுடன் பாடி அதனை ஆடி நடித்தாலே நாடகமாகும். ஒழுங்கான முறையில் ஒரு விஷயத்தை நடித்துக் காட்டலையே நாடகம் என்று கூறுவர். கருத்துக்களை நடித்தல், கதைகளை நடித்தல் என்று நாடகத்தில் இரு பகுதிகள் அமையும். நாடகத்தில் நடிப்புத்தான் உயிர். அக்காலத்தில் நாடக அரங்கங்கள் பல இடங்களிலும் இருந்தன. பெண்களும் ஆண்களும் அவ்வவ்விடங்களில் நாடகமாடுவர். எப்பொருளை எடுப்பினும் ஆங்கு நடிப்புக் கலையைக் காணலாம். வீரம், அச்சம், இழிவு, வியப்பு, இன்பம், துன்பம், நகை, நடுவு நிலைமை, வெகுளி முதலிய ஒன்பது சுவைகள் நடிப்பில் உண்டு. நாடகத்தின் நோக்கமும் பல்வேறுவகைகளாகவிருக்கும். தமிழ் நாட்டில் நாடகத்தை நடிப்பதற்கென்றே தனிப்பட்ட சாகியத்தார் இருந்துள்ளனர். பண்டைக் காலத்தில் நாடகக் கலை மிகவும் உயர்நிலையில் இருந்ததற்குப் பல நு}ல்களும் சான்றுகள் பகரும். இயல். இசை, நாடகம் ஆகிய முத்தமிழின் இயல்புகளையும் எடுத்துக்காட்டச் சிலப்பதிகாரம் ஒன்றே போதமானது. தமிழின் முப்பகுதிகளையும் முக்கலைகளாகப் பாதுகாத்தல் இன்றியமையாததுவாகும்;. நாட்டின் செல்வம் கலைகளே.

No comments:

Post a Comment