Monday, 19 September 2016

ஆதித்தமிழ் வரலாறு -9


கடவுட் கொள்கை
உலக மக்கள் வாழ்க்கையை ஆராயப்புகின் அவர்கள் எவ்விதக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கின்றனர் என்பது தெரியலாகும். சிலர் செல்வத்தையே தமது நோக்கமாக வைத்துக் கொண்டு வாழ்க்கையை நடத்துகின்றனர். சிலர் ஆழ்ந்த தமது உணர்ச்சியினால் நல்ல தமது அறிவுத் தெளிவின்மீது நோக்கைக் கொண்டு வாழ்க்கை நடத்துகின்றனர். பண்டைக் காலத்தில் தமிழ்மக்கள் தமது ஆழ்ந்த நல்ல அறிவுத் தெளிவையே நோக்கமாகக் கொண்டு வாழ்க்கையை நடத்தியுள்ளனர். அவர்கள் உள்ளத்தில் அறிவின் உணர்ச்சி எவ்விதம் உதித்தது?

இருளில் மயங்கி வழி தெரியாது இருக்கும் மக்கள் காலை கதிரோன் உதயமானதும் புத்தொளி பெற்று வழி தெரிந்து நடக்கின்றார்கள். அதுபோன்று ஐவகை நிலங்களிலும் வாழ்ந்து வந்த மக்கள் மற்றமற்ற இடங்களைப் பார்த்து வியப்படைந்தனர். அவர்கள் எதையும் உற்றுப் பார்ப்பதில் மிகவும் கருத்துடையோராக இருக்கிறார்கள். சூரியன் உதயமானதும் உலகத்தில் ஜீவகளை தென்படுகிறதைக் கண்டு மக்கள் ஆச்சர்யம் கொண்டனர். ஒரு சூரியனால் உலகமே நடக்கின்றது என்ற வியப்பே அவர்களிடம் காணப்பட்டது. ‘பல உயிரற்ற பொருள்களும் இருந்த இடங்களிலேயே அசைவின்றி இருக்கின்றன. ஆனால் உயிரற்ற சூரியன் அசைந்து உலகையே ஜீவனுடன் திகழச் செய்கின்றது. இதனை நடத்த உண்மையில் யாரோ ஒரு சூத்திரதாரி இருக்கவேண்டும்? என்று எண்ணினர். இயக்கும் உயிர்ப் பொருளையே “இயவுள்” அல்லது ‘கடவுள்’ என்று கொண்டனர். இம் முடிபே தமிழ் மக்களுக்கு ஒருவித கடவுட் கொள்கையைக் காட்டியது.

பண்டைத் தமிழரின் ஆராய்ச்சியில் உயிர்கள், உலகம், கடவுள் என மூன்று பொருள்கள் இருந்தன. தொல்காப்பியத்தில் இவைபற்றிக் காணலாகும். உயிரின்மூலம் உலகத்தையும் கடவுளையும் துய்க்கலாம். பண்டைத் தமிழ்மக்கள் ‘தெளிந்த வுணர்வுடையதே கடவுள்’ எனக் கருதி வந்துளர். அவ்வுணர்வை அடையவேண்டியே அக்காலம் முதல் மக்கள் கடவுளை வழிபட்டு வந்துள்ளனர்.

உலகத்துயிர்களெல்லாம் ஆணும், பெண்ணுமாகவேயிருக்கின்றன. இதைக்கொண்டு கடவுளும் ஆண் பெண் வடிவங்களைக் கொண்டுள்ளவராதல் வேண்டுமென்ற பண்டைத் தமிழர் கொண்டனர். இறைவன் ஓரு பக்கம் ஆணாகவும், மறு பக்கம் பெண்ணாகவும் விளங்குவதாக ஐங்குநுறு}று என்னும் சங்க நு}லில் கூறப்படுகிறது.

தரையில் இருந்து மக்கள் அதிய பயனைப் பெறுவதாலும், தரையும் மனங் கோணாது மக்களுக்கு உவந்து கொடுப்பதாலும் முற்கால மக்கள் தரையை ஒரு பெண் தெய்வமாக மதித்து வணங்கி வந்தனர். இதனைத் ‘தரைப் பெண் வணக்கம்’ அல்லது ‘பூமாதேவி வணக்கம்’ என்பர். இன்னும் பூமாதேவியை பெற்ற தாய் என்றும் மக்கள் அழைத்து வந்திருக்கின்றனர். இதிலிருந்து பிறந்ததே ‘சக்தி’ வணக்கமும் என்று அறிஞர் கூறுகின்றனர். பண்டைநாளில் நரபலியிடும் வழக்கமும் இருந்து வந்துள்ளது. இச் சார்பு மக்களைக் ‘கபாலிகர்’ என அழைப்பர். ஆலயங்களில் தேவதைகளைப் பிரீதி செய்யும் பொருட்டு விலங்குகளைப் பலியிடும் வழக்கம் இன்றும் நிலவுகின்றதை நாம் காண்கின்றோம். இவ் வழக்கத்தை அன்று கடவைள வணங்காத மக்களுக்கெனவே முன்னோர் ஏற்படுத்தியிருத்தல் வேண்டுமென்றும் அப் பழக்கம் இன்றும் எல்லோரிடையேயும் நிலவிவிட்டதென்றும் கூறுகிறார்கள். எப்பொழுது இப் பலிப் பழக்கம் ஒழியுமோ அன்றே தமிழ் மக்களுக்கு விமோசன மேற்படும்.

சிவலிங்க வணக்கமும் மக்களிடையே பரவியிருந்திருக்கிறது. சிவனையே எல்லாத் தெய்வங்களுக்கும் முதல்வர் என மக்கள் கருதி வழிபட்டு வந்துளர். முல்லை நில மக்கள் கண்ணனைத் தெய்வமாக வழிபட்டனர் என்பதற்கு தொல்காப்பியத்தில் வரும் ‘மாயோன் மேய காடுறை யுலகமும்” என்பதால் அறியப்படுகிறது. தெய்வங்களுக்குப் பல கரங்களையும் சிரங்களையும் அமைத்து ஒவ்வொரு பெயரால் அழைத்து வணங்கி வந்தனர். நந்தி வழிபாடும் மக்களிடையே இருந்துள்ளது. விலங்கினங்கள், பறவைகள், ஊர்வன முதலியனவற்றைத் தெய்வங்களாக எண்ணி வணங்கி வந்துளர். இன்றும் மாடு முதலியவற்றையும், கெருடன் முதலியவற்றையும் நாகம் முதலியவற்றையும் தெய்வங்களாக வணங்குகின்றனர்.

பண்டும் இன்றும் தமிழ் மக்கள் தங்கள் தெய்வங்களின்மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். ஆபத்துக் காலங்களிலெல்லாம் கடவைள வேண்டிக் கொள்வர். நம்பிக்கையின் பலமும், ‘கடவுள் இருக்கிறார். அவர் நம்மைக் காப்பாற்றுவார்” என்ற அச்சமின்மையுமே ஆபத்துக் காலங்களில் அவர்களைத் தப்ப வைக்கின்றது. இதனால் கடவுள் பக்தி இன்னும் அதிகப்படுகின்றதேயொழியக் குறையமாட்டாது. கடவுளை வேண்டி நேர்ந்தோர் தமது ஆபத்து நீங்கியதும் தமது நேர்த்திக்கடனைச் செய்து முடிப்பர். விக்கிரகங்களை உற்சவ காலங்களில் ஊர்வலம் கொண்டு வருவார்கள். விழாக் காலங்களில் பலவகைப் பொருள்களும் கடவுளுக்குப் படைக்கப்படும். தமிழ் மக்களின் சமயம் சைவமேயாகும். அவர்கள் சமயம் எப்போ ஆரம்பித்தது எனக் காலவரையறுத்துக் கூறு முடியாது எனப் பல அறிஞர்களும் கூறிப் போந்துளர்.

தமிழ் நாட்டில் பல சமயங்கள் இருந்த காலத்திலும் அவற்றைத் தமிழ் மக்கள் ஒறுக்க நினைக்காது சமயப் பொறுமையையே கையாண்டனர் என்பதற்குப் போதிய சான்றுகள் உள. பண்டை நு}ல்கள் பலவும் சமயங்களையுந் தழுவியே பெரிதும் எழுதப்பட்டுள்ளன. வேறுபட்ட மதங்கள் மாத்திரமன்றி வேறுபட்ட தெய்வங்களும் மக்களது வணக்கத்தில் இருந்துள்ளன. அக்காலத்தில் அரசரும் தம் மதத்தை மாத்திரம் நிலைநாட்ட வேண்டுமென்னும் எண்ணமின்றி சகல மதத்தினரும் ஆதரவளித்துப் பாதுகாத்து வந்தனர்.

அக்கால மக்களிடையே ஆரம்பித்து வைக்கப்பட்ட மரபுப் பெயர்கள் யாவும் தொழிலடியாகப் பிறந்தனவேயன்றி வேறில்லை. இன்றைய உலகில் பணமும் ஆதிக்கமும் படைத்தோர் தாம் தமிழ்ச் சாதியத்தார் என்பதை மறந்து மரபு பேதங்களை எடுத்துக் காட்டி ஒரு சார்பு மக்களை ஒதுக்குகின்றனர். உலகிற் பிறந்த சாதி இரண்டேயன்றி வேறில்லை. இன்றைய ஜாதி மரபுகள் ஜீவ னோபாயத்திற்காக மேற்கொண்ட தொழிலடியாகப் பிறந்தவையே. ஜாதிக் கொள்கைகள் வேரூன்றியிருக்கும் இந்நாளையில் மனித சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்னும் கொள்கைகளை நிலைநாட்டுவது எங்ஙனம்?

சமயக் கொள்கைகளைப் புதிய உருவில் ஆக்க முற்பட்டோர் இந்த ஜாதிப் பிரிவுகளையும் சமயத்துடன் தொடர்வுபடுத்தி விட்டனர். இந்த ஜாதிக் குழப்பங்கள் நீங்கி எல்லோரும் ஒரே மதம், ஒரே ஜாதி என்ற கொள்கை என்று நிலவுமோ அன்று தமிழன் தன் அடிமைத் தளையிலிருந்து நீங்கிச் சுதந்திரமடைவான்.

தமிழ் மக்கள் தம்முள் இறந்தாரை உரிய ஈமச் சடங்குகள் நிறைவேற்றப்பட்ட பின்னர் சுடுகாட்டிற்கெடுத்தேகி அங்கு தகனம் செய்வர். இம் முறை இன்றும் சைவமக்களிடையே நிலவி வருவதைக் காணலாகும். அக்காலத்தில் மனைவி கணவனுடன் இறக்கும் வழக்கமும் ஒரு சாரரிடையே நிலவி வந்துள்ளது. நற்றிணை, கநற்தொகை, மணிமேகலை முதலியவற்றில் இவற்றைப் பற்றிக் காணலாகும். தமிழ் மக்களின் சமயக் கோட்பாட்டில் மறுலவுக வாழ்க்கையைப் பற்றிய திடமான உணர்ச்சியிலிருந்து வந்துளது. இன்றும் இத்திட வுணர்ச்சி இருக்கின்றதை நாம் காணலாகும்.

பழைய காலத்தில் தமிழ் நாட்டில் சைவமதக் கோவில்கள் திகழ்ந்தன. இன்றும் அவைகளே நாட்டின் கண்கள்போல இலங்கா நிற்கின்றன. கடல் கொண்ட குமரிக் கண்டத்திலே இத்தகைய பெருங் கோவில்கள் பல இருந்தனவென்று கூறப்படுகின்றது. தமிழ் மக்கள் தமது நாட்கருமங்களில் கடவுள் வழிபாட்டையும் ஒன்றாகக் கொண்டிருந்தனர். தமிழ் நாட்டின் மக்களிடையே சைவத்தின் கிளைகள் பல தோன்றிப் பரவின. வைஷ்ணவம், புத்தம், ஆருகதம், சமணம் முதலியன சைவத்தின் பல தரத்தினங்களைக் கொண்டனவாகக் காணப்படுதலை நுணுகி ஆராய்வோர் எடுத்துக் காட்டுகின்றனர். சைவத்தின் தத்துவங்களை மக்களுக்கு ஏற்ப போதிக்கின்றன இம் மதங்கள். அக்காலத்தில் தமிழ் மக்கள், ஒரு ஆறானது பல இடங்களிலும் ஊற்றெடுத்துப் பல சிறு கிளைகளாகப் பரந்து பாய்ந்து இடையிடையே தம்முட் கலந்து ஈற்றில் ஒன்றாகி ஒரு கடலுட் பாய்வதுபோல் உலகத்திலும் பல சமயங்கள் பல வழிகளிலும் மக்களை அழைத்துச் சென்று ஈற்றில் ஒரு இடத்திற்கே அவர்களைக் காட்டிவிடுவதாகும். என்ற உயர்ந்த கொள்கையைத் தம்முள் கொண்டிருந்தனர். இதனாலேயே அவர்கள் இடையிடையே தோன்றிய பல சமயங்களையும் பரவ விடாது தடுக்க முயற்சியெடுக்கவில்லை. இன்றும் சைவம் தழைத்தோங்குவதற்கு இதுவே முதற் காரணமாகும். உலகில் ஏனைய மதங்கள் தம்மை நிலைநாட்டவேண்டி இரத்தம் சொரிந்த போதிலும் இத் தமிழர் சமயமான சைவம் தானாகவே பரவியது. மறு சமயங்களில் இரத்தக் கறை உண்டு. இதனை மறுக்கமுடியாது. எங்கள் தமிழர் மதம் உலகம் முழுவதும் பரவியிருந்தது. இதற்குச் சான்றுகள் பலவுண்டு. ஆராய்ச்சியின் பயனாக ஆங்காங்கு தமிழர்களின் சமய நிலையங்கள் வெளிப்பட்டுள்ளன. இச் சமயநிலைகொண்டு தமிழ் மக்கள் குமரிக்கண்டம் முதல் உலகம் முழுவதும் பரவியிருந்தனர் என்பது வெளிப்படையாகத் துலங்கா நிற்கின்றது. தமிழ் மக்களின் உயிர்நிலை போன்றது அவர்கள் சமயநிலை, ஆராய்ச்சியே இதற்குச் சான்று பகரும்.

No comments:

Post a Comment