ஐவகை நிலமும் மக்களும்
தமிழ் நாட்டின் முத்தமிழ் நாட்டுப் பிரிவுகளையும் ஐவகை நிலங்களாக மக்கள் பகுத்திருந்தனர். இவ்வைவகை நிலங்களிலும் வாழ்ந்து வந்த மக்கள் அவ்வந்நிலப் பெயர்களையே கொண்டு அழைக்கப்பட்டனர். குறிஞ்சி, முல்லை. மருதம், நெய்தல் என நான்கு நிலங்களாக நாடுகள் பகுக்கப்பட்டிருந்தன. குறிஞ்சி நிலத்திலும், முல்லை நிலத்திலும் சூரியனது வெப்ப மிகுதியால் தம் இயல்பழிந்து மணல் வெளியாக மாறுவதுமுண்டு. இதனைப் பாலைநில மென்பர். இவ்வைவகை நிலத்திலும் வாழ்ந்தவர்கள், தமிழ் மக்கள், இந்நில மக்களுக்கு அவ்வந் நிலப்பெயர்களே வழங்கப்பட்டிருந்தன என நு}ல்கள் கூறும்.
மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சி நிலமாகும். மலை நாட்டில் வாழ்வோர் வில்லில் அம்பு பூட்டி எய்வதில் மிகுந்த வல்லமை யுடையவர்கள். மலையிடத்தே திரியும் மிருகங்களை வேட்டையாடியும், அவ்விடத்திற் கிடைக்கும் பழம், கிழங்கு, தேன் முதலியவற்றினை உண்டும் வாழ்ந்தனர். ஆடவர் வேட்டை யாடுவதற்கு வெளியே சென்ற காலத்து பெண்கள் பழவகைகளும் மூங்கிலரியும் மலை நெல்லும் சேகரித்து வைப்பார்கள்.
இக்குறிஞ்சி நிலத்தின் கண்ணே கல்வி கேள்விகளிலும் வீரத்திலும் சிறந்து விளங்கும் ஆடவனை பொருப்பன், வெற்பன், சிலம்பன் என அழைப்பர். இவனே இந்நில மக்கள் தலைவன் ஆவான். மற்றைய ஆடவர் குறவர், கானவர் எனப்படுவர். கல்வி முதலியவற்றால் சிறப்புடைய பெண்ணைக் குறத்தி, கொடிச்சி என அழைப்பர். இவள் இந் நிலத்தலைவன் மனைக்கிளத்தி ஆவள். மற்றும் பெண்கள் குறத்தியர் என அழைக்கப்படுவர்.
இந்நில மக்கள் பெரிய விவாகக் கிரியைகளால் கட்டுப்படுத்தப்படவில்லை. காளையரும் கன்னியரும் ஒருவரையொருவர் காதலித்து மணந்து கொள்வர். சிலநாட்களின் பின் உறவினர் எல்லோரும் ஒன்றுகூடியிருந்து கொண்டாடுவதே அக்கால மணக்கிரியையாக இருந்தது. ஆடவரும் பெண்களும் - பிரதானமாகப் பெண்கள்தான் - தம்மை அலங்கரித்துக் கொள்வதில் மிக்க விருப்பமுடையவர்களாயிருந்தனர். இங்குள்ள பெண்கள் தங்கள் கூந்தலை ஐவகையாகப் பின்னி முடிவர். மணிகளைப் பொறுக்கிக் கோர்த்தும், மலர்களைப் பறித்து மலையாகத் தொடுத்தும் அணிந்து கொள்வர். தம் காதலர் வீரவேட்டையின் அறிகுறியாகக் கொணரும் புலிப்பற்களை மாலையாகக் கோர்த்துத் தாலியாக அணிவர். இவ்வழக்கே இன்றும் தமிழ் மக்களிடையே மணவினையின் பொழுது தரிக்கும் வழக்கம் நிலவுகின்றது.
மலைநாட்டு மக்களது குலதெய்வம் குமரக்கடவுள் ஆகும். இங்குள்ள மக்கள் முருகக்கடவுளை வழிபட்ட முறைபற்றித் திருமுருகாற்றுப்படையில் பழமுதிர்ச் சோலை யென்னும் பகுதியின் கீழ் அழகாகக் கூறப்பட்டுள்ளது.
குறிஞ்சி நிலத்து மக்கள் பெருகத்தொடங்கினார்கள். மலையிடத்தே கிடைக்கும் பொருள் அங்குள்ளார்களுக்குப் போதாததாயிற்று. ஆகவே அவர்கள் கீழே சென்று காடுகளில் தம் வாழ்க்கையை நடத்தினர். காடும் காடு சார்ந்த இடமும் முல்லை நிலமென்பர். இங்குள்ள மக்கள் தாம் வேட்டையாடுதற்கு உபயோகித்த நாய்களையும், ஆடு, மாடு, எருமை முதலியவற்றையும் வீடுகளில் வளர்த்து வந்தனர். ஆடு மாடுகளை மேய்த்து அவை கொடுக்கும் பிரயோசனங்களை நம்பியே இவர்கள் வாழ வேண்டியவர்களானார்கள். மோர், தயிர் முதலியவற்றினை மருத நிலத்தே கொண்டு சென்று விற்று அந்நிலத்தில் விளையும் நெல் முதலியவற்றைப் பெற்று வாழ்க்கையை நடத்தினர். இடையர் ஆடு மாடுகளைக் காட்டிற் கொண்டு சென்று மேய்த்து மாலைக் காலத்தே வீடு திரும்புவர்.
முல்லை நிலத்து மக்களிலே கல்வி முதலியவற்றிலே சிறந்த ஆடவனைக் குறும்பொறைநாடன் தோன்றல் என அழைத்தனர். இவனையே இந்நிலத் தலைவனாகக் கொண்டனர். கல்வி கேள்விகளில் சிறந்த பெண்ணை மனைவி, கிளத்தி என அழைப்பர். இவள் இந்நிலத் தலைவனது மனைவியாவாள். இங்குள்ள மற்றும் ஆடவர்களை இடையர், ஆயர் எனவும், மற்றும் பெண்களை இடைச்சியர், ஆய்ச்சியர் எனவும் அழைப்பர். மகளிரும் மைந்தரும் மணம் முடிந்த பின்னர் வாழ்க்கையை நடத்துவதாய கற்பு இவ்விடத்தில்தான் நிலைபெற்றது என நு}ல்கள் கூறும்.
இந்நில மக்கள் தாம் வசித்த இடங்களைப் பல பிரிவுகளாகப் பகுத்திருந்தனர். பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்து ஐக்கியமாக வாழ்ந்தன. இக் குடும்பங்களுக்குக் தலைவனாக ஒருவன் இருந்தான். இவ்வாறு முல்லை நிலத்தே முதல் அரசன் தோன்றினான். அரசனைக் கோன் என்றும் அழைப்பர். இப் பெயரே இதற்கு உதாரணமாகும். முல்லை நில மக்கள் வாசுதேவனை வழிபடுவர். இந்நிலப் பெண்கள் மாயன் புகழ்பாடிக் கைகோர்த்துக் குரவைக் கூத்தாடுவர்.
வயலும் வயல் சார்ந்த இடமும் மருத நில மெனப்படும். மருத நிலம் நீர்வளம் பொருந்தியது. அங்கு மருத மரங்கள் செழித்து வளரும். மக்கள் நெல், கரும்பு முதலியவற்றை விளைவித்து அவற்றின் பயன்களைப் பெறுவர். அரசர்க்குரிய் தலைநகரம் பெரும்பாலும் மருமநிலத்திலேதான் உண்டு. ஆறுகளில் இருக்கும் வெள்ளத்தை வயல்களுக்குப் பாய்ச்சிப் பயிர்களை விளைவிக்க இங்குள்ளவர்கள் கற்றிருந்தனர். இவர்கள் வெள்ளத்தை ஆண்டமையால் வெள்ளாளர் எனவும், வேளாண்மை செய்தமையால் வேளாளர் எனவும் அழைக்கப்பட்டனர். இந்நில மக்களிடையே கல்வி கேள்விகளிலே சிறந்த ஆடவனை ஊரன், மகிழ்நன் என அழைத்தனர். இவன் இந்நில மக்கள் தலைவனாவான். கல்வி கேள்விகளில் சிறந்த பெண்ணை கிளத்தி, மனைவி என அழைப்பர். இவள் இந்நிலத் தலைவன் மனைக்கிளத்தமியாவாள். இந் நிலத்தேயுள்ள மற்றைய ஆடவர்களை உழவர், கடையர் எனவும் பெண்களை உழத்தியர், கடைச்சியர் எனவும் அழைத்தனர்.
இவ்விடத்தே மக்கள் சந்தோஷமான வாழ்க்கையை நடத்தினர். ஆடல் பாடல்களும் பரத்தையர் சேரிகளும் பொழுது போக்கிற்குரிய பல இடங்களும் இங்கேயிருந்தன. இந்நில மக்களுக்கு இந்திரனே தெய்வம். இந்திரனுக்கு ஆண்டுதோறும் பெரிய கொடியேற்று விழா நடந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது.
கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் எனப்படும். நெய்தல் நில மக்களுள் கல்வி கேள்விகளிற் சிறந்த ஆடவனைச் சேர்ப்பன், புலம்பன் என அழைப்பர். கல்வி கேள்விகளிற் சிறந்த பெண்ணைப் பரத்தி, நுளைச்சி என அழைப்பர். இவள் இந்நிலத் தலைவன் மனiயாளாகும். மற்றும் ஆடவரை நுளையர், பரதர், அளலர் என்றும், பெண்டிரை நுளைச்சியர், பரத்தியர், அளத்தியர் என்றும் அழைப்பர்.
நெய்தல் நிலத்து மக்கள் மீன்பிடி படகுகளில் சென்று ஆழ்ந்த கடலிடத்தே வலைவீசி மீன்களைப் பிடிப்பர். பிடித்த மீன்களைக் கரையிடத்தேயுள்ள மணலில் காயவிடுவர். பதரவரின் இளைய மகளிர் புன்னை மரங்களின் நிழலில் இருந்து உணங்கும் மீனைக் கவரவரும் புட்களை ஒட்டிக் கலைப்பர்.
கடற்கரைகளில் அரசர்களால் நிறுவப்பட்ட பண்டகசாலைகள் காணப்படும். வெளித் தேசங்களுக்கு அனுப்பப்படும் பொருள்களும் கடல் மார்க்கமாக வந்திறங்கிய பொருள்களும் அப்பண்டகசாலைகளில் தேங்கிக் கிடக்கும். கடல் மார்க்கமாக வர்த்தகப் பொருள்கள் தமிழகத்திற்கு வந்தது பற்றிப் பல நு}ல்களும் கூறுகின்றன.
“கலத்தினும் காவினும் தருவனர் ஈட்டக்
குலத்திற் குன்றாக் கொழுங்குடிச் செல்வா”
எனச் சிலப்பதிகாரம் கூறுகின்றதை ஆய்ந்தால் பல உண்மைகளை அறியலாகும். கடற்கரைகளில் அமைத்திருந்த பண்டகசாலைகளில் இருக்கும் பொருள்களைக் கடலிற் செல்வோர் பகுத்துணரும் பொருட்டுப் பல கொடிகள் நாட்டப்பெற்றிருந்தன.
கடலிலே செல்லும் கப்பல்கள் திசை அறிந்து செல்வதற்கு கடற்கரைகளில் வெளிச்ச வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன. உப்பங் கழிகளில் விளைந்த உப்பை, உமணர்கள் வண்டி வண்டிகளாக ஏற்றிச் சென்றனர். நெய்தல் நிலத்தின்கண்ணே சிறந்த பட்டணங்கள் உண்டு. இங்கு பெரிய சைவர்கள் மாடி வீடுகளில் வாழ்வர். மயில் போன்ற சாயலும் குயில் போன்ற குரலுமுடைய ஒள்ளிய வளையல்களை அணிந்த மெல்லியல் மகளிர் கடற்கரைகளில் உலாவுவர். இக் கடல் ஓரங்களில் இருந்த பரதவரே அரேபியா, எகிப்து, மலாயா, காம்போதியம், சீனம் ஆகிய நாடுகட்குச் சென்ற பெரிய மாலுமிகளாவர். இவர்கள் வருணனையே தெய்வமாக வணங்குவர்.
குறிஞ்சி நிலத்தும் முல்லை நிலத்தும் உள்ள சில பகுதிகள் சூரிய வெப்பத்தால் தம் இயல்பழிந்து பாலை நிலமாக மாறுவதுண்டு. வேட்டை மிருகங்களைத் துரத்திச் செல்லும்மக்கள் இந்தப் பாலை வனங்களில் தங்கிவிடுதலும் வழக்கம். இவ்விடத்தில் ஜனங்கள் நிலையான வாழ்க்கையை மேற்கொண்டிருந்தனர் என்பது தெரியவில்லை. பாலைவன வழிகளிலே கள்வர்கள் தங்கி அவ்வழியே செல்லும் மக்களைக் கொன்று அவர் பொருள்களைக் கவர்வர்.
இந்நிலத்து வாழ்ந்த மக்களுள் கல்வி கேள்வி முதலியவற்றில் சிறந்த ஆடவரை விடலை, மீளி என அழைப்பர். இவன் இந்நிலத் தலைவன் ஆவான். மற்றும் ஆடவர் எயினர், மறவர் என அழைக்கப்படுவர். கல்வியிற் சிறந்த பெண்ணை எயிற்றி யென்பர். இவள் இந்நிலத் தலைவன் மனையாளாகும். மற்றப் பெண்களை எயிற்றியர், மறத்தியர் என அழைப்பர்.
இவ்விதமாக முத்தமிழ் நாட்டிலும் வாழ்ந்துவந்த ஐந்நில மக்களது வாழ்க்கை விபரம் நமக்கு அத்தியாவசியமாகும். வளம் பொருந்திய தமிழ் நாட்டில் மக்கள் செல்வம் கொழிக்கத் திகழ்ந்தார்கள். முத்தமிழ் நாடுகளும் தமிழராய தமது சொந்த நாடு என்று வாழ்ந்து வந்தார்கள். இவைகளில் வாழ்ந்து வந்த மக்களின் வீடு, வாயில், நடை உடை பாவனை, பழக்க வழக்கங்களைப் பற்றிப் பத்துப் பாட்டில் காணலாம். தமிழகம் முழுவதும் வாழ்ந்த தமிழ் மக்கள் வாழ்க்கையைநோக்கல் எமக்கு அவசியம்.
No comments:
Post a Comment